Sunday, 17 April 2011

இந்து மன்னர்கள் எத்தனையோ கொடுமைகள் செய்திருக்கலாம் ஆனால் ஓரிருவரைக்கூட மதம் மாற்றியதில்லையே?

a. நாம் சில அடிப்படைகளை நாம் புரிந்துகொள்ளவேண்டும். முதலில் இஸ்லாம் கிறித்துவம் பேன்றவை பரப்புவதற்குரிய மதங்கள் (Missionary religions). இந்து மதம் அப்படிப்பட்டதல்ல. முற்பிறவியில் அவர் செய்த கரும விளைவிற்கேற்ப இப்பிறவியில் அவர் குறிப்பிட்ட பிறவியில் பிறந்து இழிவுகள் அல்லது பெருமையை அடைகின்றார் என்கின்றது இந்துமதம். எனவே வேற்று மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாற்றினால் அவரை எந்த மதத்தில் வைப்பது என்பதும் ஒரு பிரச்சினை.

b. இங்கேயுள்ள வைதிக, சனாதன, வர்ணாசிரம மதத்திற்கு இந்துமதம் என்ற பெயர் சமீபத்தில் ஏற்பட்டது தான் என்பதை சங்கராச்சாரி, விவேகானந்தர், பாரதி உட்பட சகலரும் ஏற்றுக்கொள்கின்றனர். வரலாறு முழுமையும் பல்வேறு சுதந்திரமான இன குழு மக்களை அவர்களுக்கு ஒரு சாதி பெயர் கொடுத்து தனது ஆட்சிகளுக்குள் சாதியாக ஏற்றதாழ்வுகளும் இந்து மன்னர்கள் பார்ப்பனர்களின் துணையோடு கொண்டு வந்தனர். இதன் மூலம் அந்த சுதந்திர மக்கள் மீது பெரும்பாலான சுரண்டல்களும் சாதிக் கடமைகளும் திணிக்கப்பட்டு அவர்கள் என்றென்றும் அடிமைகளாக்கப்பட்டனர்.

c. மதம் மாற்றியதில்லையே தவிர மற்ற மதங்களை இழிவு செய்வதிலும் அரசு அதிகாரத்தின் துணையோடு பிற மதத்தவரை இரக்கமில்லாமல் கொன்று குவித்ததிலும் இந்து மதம் வேறெந்த மதத்திற்கும் சளைத்ததில்லை. இந்து சமயச்சாரிகளின் துணையோடும் பாண்டிய மன்னன் எண்ணாயிரம் சமணர்களை ஆசன வாயில் இரும்பை சொருகிக் கொன்றதை தமது பக்தி இலக்கியங்கள் பாராட்டியுள்ளதை நீங்கள் அறிவீர்கள். "பாசிப்பல் மாசுமெய்யர்", "ஊத்தவாயார்" "மந்திபோல் திரியும் அந்தகர்கள்" என்றெல்லாம் திருநாவுக்கரசர் சமணர்களைத் திட்டியுள்ளதை தேவாரத்தில் காணலாம். சமணர்களையும், சாக்கியர்களையும் "கூடுமேல் தலையை அறுப்பதே கருமங்கண்டாய் அரங்கமா நகருளானே" திண்டரடிப்பொடி ஆழ்வார் வேண்டினார். எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல சாக்கிய பெண்களைக் கற்பழிக்க திருவுள்ளம் வேண்டுமென சம்பந்தர் பாடினார். பாடியது மட்டுமல்ல, சோழ, பாண்டிய அரசின் துணையோடு இவை எல்லாம் நிறைவேற்றப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன.  

d. இந்து மதம் பரப்புவதற்குறிய மதமில்லை என்ற போதிலும் பல்வேறு இன குழு மக்கள் இந்து மதத்திற்குள் கொண்டுவரப்பட்டு சாதீய படிநிலையில் இருத்தப்பட்டது பற்றி சற்றுமுன் கண்டோம். இது தவிர சாதீய கொடுமைகளுக்கு எதிராக கிறிஸ்தவத்துக்கும், இஸ்லாத்திற்கும் மதம் மாறிய பழங்குடியினரை மீண்டும் இந்துமதத்திற்குள் கொண்டுவருவதற்காக இன்று பெரிய அளவில் இந்துத்துவவாதிகள் குஜராத் முதலான இடங்களில் இயக்கம் நடத்துவதை நாம் மறந்துவிடக் கூடாது. சமீபத்தில் (1998-99) கிறிஸ்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பின்னணியாக இத்தகைய இந்து மத மாற்ற இயக்கங்கள் இருந்துள்ளதை பத்திரிக்கைகள் (Frontline outlook Jan-99 ) முதலான இதழ்கள் சுட்டிக்காட்டியுள்ளன. தவிரவும் "ஹரே கிருஷ்ணா ஹரே ராமா" முதலானையக்கங்கள் வெளிநாடுகளில் இந்துமத மாற்றங்களை மேற்கொண்டு வருவதையும் இங்குள்ள இந்துத்துவவாதிகள் அவற்றோடு நெருக்கமான உறவு வைத்திருப்பதையும் நாம் மறந்து விடக்கூடாது.

0 comments:

Post a Comment