இந்துக்கள் சொன்னார்கள் என்று நான் சொல்லவில்லை. இந்து மகாசபைத் தலைவர்கள் சொன்னார்கள். சாதாரண மனிதனுக்கு தான் ஒரு இந்து என்ற உணர்வே கிடையாது, அவனுக்கு ஏதாவது உணர்வு இருக்கிறதென்றால் சாதி உணர்வு வேண்டுமென்றால் இருக்கலாம். உயர் சாதி இந்து ஆதிக்க சக்திகள் வெள்ளையரிடமிருந்து ஆட்சி அதிகாரத்தைப் பறித்துத் தாங்கள் வைத்துக்கொள்ள விரும்பியபோது சாதிகளாய் பிளவுகொண்டிருந்த மக்களை 'இந்துக்கள் ' என்ற பெயரில் ஒன்றிணைக்க வேண்டியிருந்தது . எனவே 'இஸ்லாமியர்' என்றொரு எதிரியைக் காட்டி தங்களிடமிருந்து அந்நியமாகியிருந்த தாழ்ந்த சாதி மக்களை தங்களோடு இணைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் உயர்சாதியினருக்கு இருந்தது.
இன்னொன்றையும் நீங்கள் வரலாற்றுரீதியாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஆங்கிலேயரின் வருகையோடு தேர்தல் அரசியலும், மக்கள் தொகை கணக்கீடும்(1911) இங்கே நுழைந்தது. இந்தக் கணக்கீட்டில் இஸ்லாமியர், கிறித்தவர், சாதி இந்துக்கள், தாழ்த்தப்பட்டவர் என தனித்தனியாகவே விபரங்கள் சேகரிக்கப்பட்டன. இச்சூழலில் பாகிஸ்தானும் இந்தியாவோடு இணைந்திருந்தால் இஸ்லாமியர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இந்துக்களின் எண்ணிக்கையை விட அதிகமாய்ப் போய் தேர்தல் அரசியலில் தங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் அபாயத்தை இந்துத் தலைவர்கள் உணர்ந்தார்கள். இந்நிலையை எதிர்கொள்ள அவர்கள் இரண்டு வழிகளை மேற்கொண்டனர்.
ஒன்று: தாழ்த்தப்பட்டவர்களையும் இந்துக்களாக கருதவேண்டும் என்ற கருத்தைப் பரப்புவது, 1934 பிப்ரவரியில் அலகாபாத்தில் கூட்டப்பட்ட இந்து மகாசபையின் சிறப்புக் கூட்டமொன்றில் இக்கருத்து விவாதிக்கப்பட்டது. ஆரிய சமாஜிகளும் இதர சனாதனிகளும், தாழ்த்தப்பட்டவர்களையும் இந்துக்களாக கருதவேண்டும் என்ற கருத்தை எதிர்த்தனர். எனினும் அரசியல் லாபம் கருதி தலைவர்கள் இக்கருத்தை வற்புறுத்தினர். இறுதியாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு பொதுக்கிணற்றில் நீர் இறைக்கும் உரிமை போன்றவற்றை மறுக்கக்கூடாது என்ற தீர்மானத்தை நிறைவேற்றிய இந்துமகாசபை "இருந்தாலும் அவர்கள் யக்ஞோபவீதம் (பூணூல்) அணியக்கூடாது " என அறிவித்தது.
இரண்டு: இஸ்லாமியர் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளைப் பிரித்து தனிநாடாக்கிவிட்டால் எஞ்சிய பகுதியில் 'இந்து ராஜ்யம்' அமைத்து அதில் தாங்கள் ஆட்சி செலுத்த முடியும் என உயர்சாதி இந்துக்கள் நினைத்தனர்.





0 comments:
Post a Comment