Sunday, 17 April 2011

பழைய சங்கதிகள் கிடக்கட்டும் சமீபத்திய வரலாற்றுக்கு வருவோம். இந்தியா, பாகிஸ்தான் பிரிவினைக்கு முஸ்லிம் லீக் கட்சிதானே காரணம்?


நாடு என்றால் என்ன, நாட்டுப்பற்று என்பதெல்லாம் எவ்வாறு மக்கள் மத்தியில் கட்டமைக்கப்படுகின்றது. இந்தியா என்றொரு நாடு ஆங்கிலேயோர் வருவதற்கு முன்பு இருந்ததுண்டா? எந்த ஒரு பகுதி மக்களும் தாங்கள் பிரிந்து சுதந்திரமாக வாழவேண்டுமென விரும்பினால் அதனை நிறைவேற்றுவது தானே நியாயம்? என்பன போன்ற கேள்விகளிலிருந்து தொடங்கி மிகவும் விரிவாகப் பேசப்பட வேண்டிய விசயம் இது. விரிவாகப் பேசுவதற்கு இங்கே அவசியம் இல்லாததால் நேரடியாக நீங்கள் கேட்டதற்கு வந்துவிடலாம்.

ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கெதிராக தொடக்கக் காலத்தில் எந்த வேறுபாடுகளும் இல்லாமல் இந்துக்களும் இஸ்லாமியர்களும் இணைந்தே நேரடியாக போராடினர். குறிப்பாக 1857 முதல் சுதந்திரப்போரில் இஸ்லாமிய மன்னர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் ஆங்கிலேயருக்கு எதிரான அகில இந்திய தேசிய உணர்வு என்பதை முதற்கட்ட இந்து தலைவர்கள் உருவாக்கியபோது ஆங்கிலேய ஆட்சியின் "புதிய இழிவு" களுக்கெதிராக இந்தியப் பழமையை அவர்கள் உயர்த்திப் பிடித்தனர். இந்தியப் பழமை என்பதை இந்து பழமையாகவே முன்வைத்த இவர்கள் இந்த அடிப்படையில் ஆரிய சமாஜம், வர்ணாசிரம சபை, இந்து மகாசபை போன்ற புத்துயிர்ப்பு நடவடிக்கைகளில் இறங்கினர். இன்றைய 'இந்துத்துவம்' 'இந்து ராஷ்டிரம்' ஆகிய கருத்தாக்கங்கள் முதன் முதலில் முன்வைக்கப்பட்டது இந்து மகாசபையில்தான் என்பது இன்று அவர்களே ஏற்றுக்கொள்ளும் உண்மை. சவர்க்கார், பாய் பரமானந்தர் போன்றவர்களால் தலைமை தாங்கப்பட்டு இயங்கிய இவ்வமைப்பு இந்துக்கள் மத்தியில் முக்கியமான கருத்தியல் சக்தியாக விளங்கியது. குறிப்பாகக் காந்தியின் வருகைக்கு முன்பு இதன் பங்கு குறிப்பிடத்தக்கது.

இந்து மகாசபையின் தலைவராக இருந்த பாய் பரமானந்தர் பிரிவினைக்கு முற்பட்ட இந்தியாவை மத அடிப்படையில் இரு நாடுகளாக பிரிக்கவேண்டும் என முதன்முதலில் சொன்னவர்களில் ஒருவர். இப்போதுள்ள பாகிஸ்தான் பகுதியைச் சிந்துவிற்கு அப்பாற்பட்ட ஆப்கானிஸ்தான் முதலியவற்றோடு இணைந்து ஒரு மாபெரும் முஸ்லிம் பேரரசு உருவாக்கப்படவேண்டும்.

அங்குள்ள இந்துக்கள் இங்கே வந்துவிடவேண்டும். இங்குள்ள இஸ்லாமியர்கள் அங்கே போய்விட வேண்டும் என்றார். தனக்கு 1905-ஆம் ஆண்டு வாக்கிலேயே இக்கருத்து தோன்றியது எனவும் அவர் கூறினார். பின்னர் 1937- ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற இந்து மகாசபை மாநாட்டில் அப்போது தலைவராக இருந்த சவர்க்கார் இந்தியாவை நாம் ஒற்றை தேசமாக நாம் கருத முடியாது. முக்கியமாக இரண்டு தேசங்கள் இந்தியாவிற்குள் உள்ளன. ஒன்று இந்துக்களின் தேசம்; மற்றது இஸ்லாமியர்களின் தேசம்; என்றார்.

இங்கொன்றை நீங்கள் கவனிக்க வேண்டும். இஸ்லாமியருக்கு தனிநாடு வேண்டுமென்ற கோரிக்கை முஸ்லிம் லீக்கால் முதன் முதலில் எப்போது வைக்கப்பட்டது தெரியுமா? 1940- ஆம் ஆண்டு லாகூர் மாநாட்டில்தான். அதற்கு முன்பே இந்துமகாசபை இந்த கோரிக்கையை முன்வைத்து விட்டது என்பதுதான் உண்மை.

0 comments:

Post a Comment